சூடுபிடிக்கும் தமிழ்நாடு சர்ச்சை - ஆளுநருக்கு ஆதரவாக வந்த பாஜக மூத்த தலைவர்

தமிழ்நாட்டை தமிழகம் என சொல்வதே சரியாக இருக்கும் என ஆளுநர் ஆர்என் ரவி பேசியதில் தவறொன்றும் இல்லை என அவரக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.
தமிழ்நாடு - தமிழகம்?:
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்." எனப் பேசியிருந்தார்.
பிரிவினை:
மேலும், "திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். திராவிடக் கட்சிகள் பிரிவினையை வளர்த்தது. எல்லோரும் பாரதமாக ஒன்றாக இருக்கும் போது தமிழர்கள் மட்டும் தங்களை திராவிடர்கள் என அழைத்து கொள்கிறார்கள். பாரதத்தின் ஒரு அங்கமாக தமிழ்நாடு இல்லை என்று கடந்த 50 ஆண்டுகளாக பிரச்சாரம் முன்னெடுக்கபடுகிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. பாரதத்தின் பகுதியே தமிழகம்" என ஆளுநர் ரவி பேசியிருந்தார்.
#தமிழ்நாடு:
ஆளுநரின் இந்த கருத்துக்கு ஆளும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து திமுகவினர் பலரும் 'தமிழ்நாடு' என்ற ஹேஷ்டேக்கில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும், தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும், திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும், "#தமிழ்நாடு வாழ்க!" என ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
கண்டனம்:
ஆளுநரின் இந்த பேச்சிற்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். "பிரிவினையை உண்டாக்கியது மனு தர்மமா அல்லது திராவிடமா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி ஆளுநர் இதுவை பேசுகிறார் என நினைத்துகொண்டிருந்தேன் அவர் உளறுகிறார் என விமர்சனம் செய்திருந்தார். மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோவும் பாஜகவின் நிழல் தலைவராக ஆளுநர் செயல்படுவதாக கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார்.
திராவிடம் என்பது சமஸ்கிருத சொல்:
இந்நிலையில், ஆளுநர் ரவியின் பேச்சிற்கு ஆதரவாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ‛‛பகுப்பாய்வில் அனைத்து இந்தியர்களும் ஒரேமாதிரியான டிஎன்ஏவை கொண்டுள்ளனர். தமிழ்நாடு என்பது தமிழை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கான மாநிலம் அல்ல என்பதை தெளிவுப்படுத்துவதற்காக தமிழக ஆளுநரை நாங்கள் ஆதரிக்கிறோம். திராவிடம் என்பது சமஸ்கிருத சொல்லாகும். இது ஆதிசங்கரரால் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. ஆரியன் என்பது போலியாக ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்ட வார்த்தையாகும்'' என கூறியுள்ளார்.
தற்போது தமிழ்நாடா? தமிழகமா? என்ற விவாதம் நடந்து வரும் நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்து விவாததிற்குள்ளாகியுள்ளது.