உத்தரவை மீறிய பள்ளி நிர்வாகம்...ஆர்ப்பாட்டத்தில் குதித்த கட்சியினர்...நடந்தது என்ன?

உத்தரவை மீறிய பள்ளி நிர்வாகம்...ஆர்ப்பாட்டத்தில் குதித்த கட்சியினர்...நடந்தது என்ன?

ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமிற்கு அனுமதி அளித்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்...

ஆர்.எஸ்.எஸ்க்கு மறுக்கப்பட்ட அனுமதி:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸினுடைய பயிற்சி முகாம்களை நடத்துவதற்கு அனுமதி இல்லை என்று ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. குறிப்பாக தனியார் பள்ளிகளிலும் ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம்கள் நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்திருந்தது. 

உத்தரவை மீறிய பள்ளி நிர்வாகம்:

ஆனால், பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை மீறி சென்னை அண்ணா நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா விவேகானந்தர் பள்ளியில் ஆர் எஸ் எஸ்-ன் இரண்டாவது நாள் பயிற்சி முகாம் கடந்த 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில், ஆர்எஸ்எஸ்-ன் தென் மண்டல அமைப்புகள் ஒன்றிணைந்து ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையில் ஆர்.எஸ்.எஸ்.தென்மண்டல முக்கிய நிர்வாகிகள் மற்றும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். மேலும், இந்த பயிற்சியின்போது பல்வேறு முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆர்ப்பாட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:

இந்நிலையில், தமிழக பள்ளி கல்வித்துறையின் உத்தரவை மீறி, சென்னை அண்ணா நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம் நடத்த அனுமதியளித்த பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 20 க்கும் மேற்பட்டோர்  கலந்துகொண்டு போராட்டம் நடத்தினர்.

இதையும் படிக்க: ரீ எண்ட்ரீ கொடுக்கவுள்ள பாபா...டப்பிங் கொடுத்த சூப்பர் ஸ்டார்...!

தள்ளு முள்ளு:

அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் பள்ளி அருகே சென்றுவிடக்கூடாது என்பதற்காக போலீசார் தடுப்புகள் அமைத்திருந்தனர். ஆனால், அவர்கள் போலீசாரின் தடையை மீறி பள்ளி அருகே சென்றதால் போலீஸாருக்கும் கட்சியினருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பின் சுமூக பேச்சுவார்த்தையை தொடர்ந்து பள்ளி அருகே நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பி கலைந்து சென்றனர். 

நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழக பள்ளி கல்வித்துறையின் உத்தரவை மீறி, சென்னை அண்ணா நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் ஆர் எஸ் எஸ் பயிற்சி முகாம் நடத்த அனுமதியளித்த பள்ளி நிர்வாகிகள் மீது பள்ளி கல்வித்துறை மற்றும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.