தமிழக ஆளுநரின் வருகையை எதிர்த்து வாகனம் மீது போராட்டகாரர்கள் கருப்பு கொடி வீச்சு..!

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக ஆளுநரின் வாகனம் மீது போராட்டகாரர்கள் கருப்பு கொடி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஆளுநரின் வருகையை எதிர்த்து வாகனம் மீது போராட்டகாரர்கள் கருப்பு கொடி வீச்சு..!

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.  பின் அங்கிருந்து புறப்பட்டு மன்னம்பந்தல் வழியாக தருமை ஆதீனத்திற்கு ஆளுநர் சென்றார். அங்கு தருமபுரம் ஆதீனத்தின் 27 வது குரு மகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று ஞானரத யாத்திரை புறப்பட உள்ள நிகழ்ச்சியை ஆளுநர் துவக்கி வைக்க உள்ளார். இதனிடையே ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட  16 அமைப்பினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் மன்னம்பந்தல் வழியாக போராட்டகாரர்களை ஆளுநரின் வாகனம் கடக்க முற்பட்ட போது ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கமிட்டதுடன் தங்கள் கையில் ஏந்தியிருந்த கருப்பு கொடியை ஆளுநரின் வாகனம் மீது வீசி எறிந்தனர். மேலும் ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மீதும் கருப்பு கொடியை வீசினர். பின் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் போலீசார் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.