கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்...!

தனியார் கல்குவாரியை மூடக்கோரி கீரனூர் அருகே குளத்தூர் தாலுகா வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 300-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்...!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த வெவ்வெயல் பட்டி மற்றும் வாத்தணாகுறிச்சி பகுதிகளில் இயங்கி வரும் எம்எம் கல்குவாரி கிரஷரை மூடக்கோரி கிராம பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு  திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வெவ்வெயல் பட்டி வர்த்தனகுறிச்சி கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்து வந்த இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொது மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக மூடப்படும் என உறுதி அளித்தார். பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.

எம் எம் கல்குவாரி கிரஷரில் இருந்து வரும் மாசுக்களால் பொதுமக்களுக்கு நுரையீரல் சம்பந்தமான வியாதிகள் ஏற்படுவதாகவும், கல்குவாரியில் பயன்படுத்தப்படும் வெடிபொருட்களால் அதிர்வுகள் ஏற்பட்டு கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட்டு வருவதாகவும் அதே போன்று குடிநீரில் மாசு கலந்த நீரை கால்நடைகள் உண்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். 

இந்நிலையில்  தற்காலிகமாக கல்குவாரி மூடப்பட்டது. பின்னர் மீண்டும் அனுமதியின்றி எம் எம் கல்குவாரி சட்ட விரோதமாக செயல்பட்டதை கண்ட பொதுமக்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு எம் எம் கல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டாவது முறையாக சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்த இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் எம் எம் கல்குவாரி மூடப்படும் என பொதுமக்கள் இடையே கூறி உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இன்று வரை கல்குவாரி மூடப்படவில்லை.

அதனைக் கண்டித்து, இன்று குளத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வத்தனாக்குறிச்சி, திருமலை ராயபுரம், வெவ்வயல் பட்டி, வத்தனாகுறிச்சி, கூட்டு குடியிருப்பு காலனி, சூசையப்பர் பட்டினம், கும்முப்பட்டி, வேலாங்குடிபட்டி, கதிரேசன் நகர், புதுவயல் ஆகிய ஊர்களின் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படாத வண்ணம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், எம்.எம்.கல் குவாரியை நிரந்தரமாக மூடும்வரை பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெறிவித்தனர்.