பொறியியல் படிப்பு: மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த  மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. 

பொறியியல் படிப்பு: மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி பதிவு www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் கடந்த ஜூலை 26-ம் தேதி தொடங்கி ஆக.24-ம் தேதி நிறைவு பெற்றது. அதன்படி, ஒரு லட்சத்துக்கு 74 ஆயிரத்து 930 மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தனர். இதில், 22 ஆயிரத்து 671 அரசுப் பள்ளி மாணவர்களும் அடங்குவர்.அதன்படி, விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று நிறைவு பெற்றது.

இந்நிலையில், அம்மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, முதற்கட்டமாக  அரசுப் பள்ளி மாணவர்கள், மாற்றுத் திறனாளி, விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியவர்களுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு செப்.17-ம் தேதி முதல் 24-ம் தேதியும், பொதுப் பிரிவு கலந்தாய்வு செப்.27-ம் தேதி முதல் அக்.17-ம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

முன்னதாக, நடப்பு கல்வியாண்டில் சேர்க்கை நடத்த தமிழ்நாட்டில் இருந்து 529 பொறியியல் கல்லூரிகள் ஏஐசிடிஇ-யிடம் விண்ணப்பித்திருந்தது. இதில் 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உரிய சான்றிதழை சமர்ப்பிக்காததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அங்கீகார விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றது. மேலும், போதிய உள்கட்டமைப்பு, ஆசிரியர் தகுதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க ஏஐசிடிஇ மறுத்துள்ளது.இதனால், நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்கிறது.அதன்படி, ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டில் 461 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் கலந்தாய்வுக்குக் கிடைத்தது. ஆனால் கடந்த ஆண்டை விட தற்போது 11 ஆயிரத்து 284  பொறியியல் இடங்கள் குறைந்துள்ளது. இதனால், விண்ணப்பித்த மாணவர்களை விட குறைவான இடங்களுக்கே கலந்தாய்வு நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.