தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசவில்லை உளறுகிறார் - தேசியகீதத்தை எப்போது மாற்றுவார் - கீ.வீரமணி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிடம் என்று கூறி பிரிவினையை வளர்க்கிறார்கள் எனப் பேசியது சர்ச்சையான நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேசியகீதம் குறித்து ஆளுநருக்கு கேள்வி எழுப்புயுள்ளார்.
தமிழ்நாடு - தமிழகம்?:
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதனை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்." எனப் பேசியிருந்தார்.
பிரிவினை:
மேலும், "திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். திராவிடக் கட்சிகள் பிரிவினையை வளர்த்தது. எல்லோரும் பாரதமாக ஒன்றாக இருக்கும் போது தமிழர்கள் மட்டும் தங்களை திராவிடர்கள் என அழைத்து கொள்கிறார்கள். பாரதத்தின் ஒரு அங்கமாக தமிழ்நாடு இல்லை என்று கடந்த 50 ஆண்டுகளாக பிரச்சாரம் முன்னெடுக்கபடுகிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. பாரதத்தின் பகுதியே தமிழகம்" என ஆளுநர் ரவி பேசியிருந்தார்.
இதையும் படிக்க: வாடிவாசலில் முகூர்த்தக்கால்... தயாராகும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
சர்ச்சை:
ஆளுநர் ரவியின் இந்தப் பேச்சு தமிழ்நாட்டில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருந்தார். "பிரிவினையை உண்டாக்கியது மனு தர்மமா அல்லது திராவிடமா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். தொடர்ந்து திமுகவினர் பலரும் 'தமிழ்நாடு' என்ற ஹேஷ்டேக்கில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மேலும், தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும், திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும், "#தமிழ்நாடு வாழ்க!" என ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
தேசிய கீதத்தை எப்போது மாற்றப்போகிறார்?:
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் செய்தியாளர்களைச் சந்தித்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இதுகுறித்துப் பேசியுள்ளார். அப்போது, "தேசிய கீதத்தில் "திராவிட உத்கல வங்கா" என்ற வார்த்தை பிரிவினை வாதமா? திராவிடம் என்பதைப் பற்றி ஆளுநருக்கு அறவே தெரியவில்லை. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இதுவரை பேசிக்கொண்டு இருந்தார் என நினைத்தோம், ஆனால் அவர் உளறுகிறார், பிதற்றுகிறார் என்பது தற்போதுதான் தெரிகிறது. ஆளுநர் தேசிய கீதத்தை எப்போது மாற்றப்போகிறார்?" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.