பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு...அதிரடி காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு...அதிரடி காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழக பள்ளிகளில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.

மியான்மரில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை:

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பசுமை தமிழகம் இயக்கம் தொடக்க விழா மற்றும் மரக்கன்று நடுவிழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்ட பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரஷ்யா - உக்ரைன் போரின் போது உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்கள் மீட்கப்பட்டது போல் தற்பொழுது, மியான்மரில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். 

பள்ளிகளுக்கு எந்தவித அனுமதியும் வழங்கவில்லை:

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பள்ளிகளை பொருத்தவரையில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி பேரணிக்கு எந்தவித அனுமதியும் வழங்கவில்லை. நீதிமன்றத்தை பொறுத்தவரை எந்த விதமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியும். இறையாண்மையை பாதிக்கும் வகையில் எந்தவித செயலும் இருக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நாங்களும் கவனத்துடன் இருப்போம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இதையும் படிக்க: தமிழ்நாட்டில் ஆர்.எஸ். எஸ் ஊர்வலம்...காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்...!

முன்னதாக, சுதந்திரதின 75 ஆம் ஆண்டு , அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 51 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2 ஆம் தேதி அணிவகுப்புக்கு அனுமதி கோரி சென்னையை சேர்ந்த சுப்ரமணியன் உள்ளிட்ட 9 பேர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.