பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவு!!

பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை.. மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவு!!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் சூழலில், பயிர் சேதம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  முன்னெச்சரிக்கையாக மேட்டூர் அணையிலிருந்தும் அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலசோனை

இந்த நிலையில், மழை பாதிப்பை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இதில் திருச்சி, கரூர் சேலம், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு

கூட்டத்தில் மழையால் பயிர் சேதம் ஏற்பட்டால் கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு  ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும் வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் அமைச்சர்கள் நேரில் நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும், நெல் மூட்டைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத வகையில் தார்பாய்கள் கொண்டு மூடவும், சேமிப்பு கிடங்குகளுக்கு மாற்றிட நடவடிக்கை எடுக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.

வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்ததை உறுதி செய்க

இது தவிர மீனவர்களுக்கான எச்சரிக்கைகள் மீன்வளத்துறை சார்பில் முறையே வழங்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இரவு நேரத்தில் அதிகப்படியான நீரை வெளியேற்றாமல், மக்களுக்கு முன்கூட்டயே வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்ததை உறுதி செய்யவும் தெரிவிக்கபட்டுள்ளது.