நவீன மதுநீதிச் சோழன் ஸ்டாலின்! கார்ட்டூன் போட்டு விமர்சிக்கும் ராமதாஸ்... 

’’ எங்கள் மதுநீதிச் சோழன் வாழ்க!” #டாஸ்மாக் Vs #தேநீர்க்கடை

நவீன மதுநீதிச் சோழன் ஸ்டாலின்! கார்ட்டூன் போட்டு விமர்சிக்கும் ராமதாஸ்... 
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (ஜூன் 14) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, 27 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்டர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
 
இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில்;  அந்த சோழமன்னனின்  அரண்மனை வாயிலில்  கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணியை  அந்த பசு அடித்தது. அதைக் கேட்டதும் மன்னனின் மந்திரிமார்கள் ஓடிவந்து பசுவிடம் குறை கேட்டனர்.
 
அந்த பசு கூறியது,” மந்திரியார்களே.... எனக்கு இரு கன்றுக்குட்டிகள்.  அவற்றில் ஒன்று உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது.  சற்று முன் தேரில் வந்த இளவரசர்  நல்ல உடல் நலத்துடன் இருந்த கன்றின் மீது தேர்ச்சக்கரத்தை ஏற்றி கொன்று விட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்ட கன்று இறந்திருந்தாலாவது, அந்த கன்று அவதிப்படாமல் இறந்து விட்டதே என்று  என் மனம் திருப்தியடைந்திருக்கும்.   ஆனால், எங்கள் குலக் கொழுந்தாக திகழ் வேண்டிய நல்ல உடல்நிலையுடன் இருந்த கன்றை இளவரசர் கொன்று விட்டார். நீங்கள் தான் மன்னரிடம் இதை எடுத்துக் கூறி எனக்கு நீதி வழங்க வேண்டும்” என்று பசு முறையிட்டது.
 
மந்திரிமார்களும் மன்னனிடம் சென்று பசு  நீதி கேட்ட கதையை கூறினார்கள். அதைக் கேட்ட மன்னர், மந்திரியாரின் காதுகளில் எதையோ கூறி, ‘’ நான் கூறியது போல அந்த பசுவுக்கு நீதி வழங்குங்கள்” என்று கட்டளையிட்டார்.
 
அரண்மனையிலிருந்த அனைவரும் திகைத்தனர்.  பசுக் கன்றை கொன்ற இளவரசனை படுக்க வைத்து  அவர் மீது தேரை ஏற்றிக் கொல்ல மன்னர் ஆணையிட்டிருக்கிறார் என்று நினைத்தனர்.
 
மந்திரியாரும், சேனைத்தலைவரும் தேரை எடுத்துக் கொண்டு பசுவின் இருப்பிடத்திற்கு விரைந்தனர். அதைப் பார்த்த மற்றவர்கள், ‘’ பார்த்தாயா எங்கள் மன்னர் அடித்த சிக்சரை! பசுவின் இருப்பிடத்தில் வைத்து இளவரசர் மீது  தேரை ஏற்றி நீதி வழங்கப்போகிறார் எங்கள் மன்னர்” என்று கதையளந்தனர்.
 
ஆனால், நேராக பசுவின் இருப்பிடத்திற்கு சென்ற மந்திரியாரும், சேனைத் தலைவரும் அங்கு நடக்க முடியாமல் நலிவடைந்த நிலையில் படுத்துக் கிடந்த இன்னொரு கன்றுக் குட்டி மீது தேரை ஏற்றிக் கொன்று விட்டு  வெற்றிக் களிப்புடன்  அரண்மனைக்கு திருப்பினர்.
எங்கோ ஒரு மூலையிலிருந்து முழக்கம் எழுந்தது. ’’ எங்கள் மதுநீதிச் சோழன் வாழ்க!”
#டாஸ்மாக் Vs #தேநீர்க்கடை என பதிவிட்டுள்ளார்.