சென்னை விமான நிலையத்தில் Rapid RT-PCR டெஸ்ட்...பரிசோதனை கட்டணம் குறைப்பு...

சென்னை விமானநிலையத்தில் 30 நிமிடங்களில் ரிசல்ட் தெரிந்து கொள்ளும் கொரோனா வைரஸ் Rapid RT-PCR பரிசோதனைக்கட்டணம் ரூ.4 ஆயிரத்திலிருந்து, ரூ.3,400 ஆக குறைப்பு.

சென்னை விமான நிலையத்தில் Rapid RT-PCR டெஸ்ட்...பரிசோதனை கட்டணம் குறைப்பு...

சென்னை பன்னாட்டு விமானநிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக இந்திய விமானநிலைய ஆணையம்,தனியாா் நிறுவனம் மூலம் ஆய்வு கூடத்தை செயல்படுத்தி வருகிறது இந்த ஆய்வு கூடத்தை தமிழக சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது.

அங்கு  பயணிகளின் பரிசோதனைக்காக 3 விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. RT-PCR எனப்படும் சாதாரண கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு கடந்த ஏப்ரல் மாதம் வரை ரூ.1,200 வசூலிக்கப்பட்டு வந்தது. அதன்பின்பு, ரூ.900 மாக குறைக்கப்பட்டது.ரூ.900 கட்டண பரிசோதனை செய்பவா்களுக்கு 8 மணி நேரத்திற்குள் ரிசல்ட் வருகிறது. அடுத்ததாக ரூ.2,500 கட்டண பரிசோதனையும் உள்ளது.இந்த பரிசோதனை செய்பவா்களுக்கு  2 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்திற்குள் ரிசல்ட் வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியிலிருந்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள ஆய்வு கூடத்தில் Rapid RT-PCR பரிசோதனை கருவிகள் செயல்பாட்டுக்கு வந்தன. அதில் பரிசோதனை செய்பவா்களுக்கு 15 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்களுக்குள் ரிசல்ட் வந்துவிடும்.ஆனால் கட்டணம் அதிகமாக ரூ.4,000 வசூலிக்கப்பட்டது. அவசரமாக விமான பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகள் இந்த  முறையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அதோடு ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சாா்ஜா, அபுதாபி ஆகிய நாடுகளுக்கு செல்லும் பயணிகள் கண்டிப்பாக ரூ. 4 ஆயிரம் கட்டணம் செலுத்தி Rapid RT-PCR  எடுத்தால் மட்டுமே விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என்று கூறப்பட்டது. இது பயணிகளிடையே கடும்  அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் பரிசோதனை கட்டணத்தை குறைக்க வேண்டும் அல்லது ரூ.900, ரூ.2,500 கட்டணங்களில்  பரிசோதனை செய்தாலே, ஐக்கிய அரபு விமானங்களில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று பயணிகள்  கோரிக்கை விடுத்தனா். ஆனால் இந்த உத்தரவு, ஐக்கிய அரபு நாட்டு அரசு போட்டது. எனவே நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரூ.4 ஆயிரம் பரிசோதனை கட்டணம் மிகவும் அதிகம். அதை குறைக்க வேண்டும் என்று பயணிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், விமானநிலைய அதிகாரிகளிடம் பேசி, கட்டணத்தை ரூ.600 குறைக்க நடவடிக்கை எடுத்தனா். அதன்படி ரூ.4 ஆயிரமாக இருந்த Rapid RT-PCR பரிசோதனை கட்டணம் தற்போது ரூ.3,400 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண குறைப்பு முறை கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது. இது பயணிகள் மத்தியில் மகிழச்சியை ஏற்படுத்தியது.