அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்பு...

சிவகங்கை கெளரி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர்களால் கட்டப்பட்ட கட்டிடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்பு...

சிவகங்கையில் பழமை வாய்ந்த கெளரி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக  காஞ்சிரங்கால் ஊராட்சியில் உள்ள சுமார் 10 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர்கள் மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். இந்நிலையில் கோவில் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக சிவகங்கை நகர திமுக நிர்வாகி ஒருவர் காவல்துறையினருக்கும், முதலமைச்சர் தனிபிரிவுக்கும் புகார் மனு அளித்தார். இதையடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்ட இந்து சமய அறநிலையத்துறையினர் அந்த இடத்துக்கு சீல் வைத்தனர். 

இதனிடையே, கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கோயில் நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க வேண்டுமென உத்தரவிட்டது. மேலும் கட்டடத்தை கட்டியவரே அதனை இடித்து, இடிபாடுகளை அவ்விடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என அறிவுறுத்தியது. ஒருவேளை அவ்வாறு செய்யவில்லை என்றால் இந்துசமய அறநிலையத்துறையினர் கட்டிடத்தை இடித்து அதற்கான செலவை ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து வசூலித்துக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

இந்த நிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறையினர் ஆக்கிரமிப்பு கட்டத்தை இடித்தனர். வருவாய் கோட்டாச்சியர் முத்துக்கழுவன், சிவகங்கை மாவட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி ஆகியோர் தலைமையில் பொக்லைன் உதவியுடன் கட்டடிம் இடித்து அகற்றப்பட்டது. முன்னதாக, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.