கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 27பேர் மீட்பு...!!

கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 27பேர் மீட்பு...!!

திருப்போரூர் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 6 வருடங்களுக்கு மேல் கொத்தடிமைகளாக இருந்த 11 சிறுவர்கள், 6 பெண்கள் உள்ளிட்ட 27 பேரை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே தையூர் ஊராட்சியில் மரம் வெட்டும் தொழிலில் 11 சிறுவர்கள், 6 பெண்கள், 10 ஆண்கள் என 27 பேர் கடந்த ஆறு வருடங்களுக்கு மேல் கொத்தடிமைகளாக இருப்பதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து திருப்போரூர் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கொத்தடிமைகளாக மரம் வெட்டும் தொழில் ஈடுபட்டிருந்த 27 பேரை மீட்டு வட்டாட்சியர் அலுவலகம் அழைத்து வந்தனர்.

கொத்தடிமைகளாக இருந்தவர்களை மீட்ட அதிகாரிகள் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்களுக்கு உணவு வழங்கி பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். இந்நிலையில், மீட்கப்பட்ட அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கிருஷ்ணாபுரம், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மரம் வெட்டும் வேலை உள்ளதாக மக்களை அழைத்து வந்து கொத்தடிமைகளாக பல வருடங்களாக அவர்களை வேலை வாங்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக இவர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்த கழிப்பட்டூர் பகுதியை சேர்ந்த பாலு என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, மாமல்லபுரத்தில் மாசி மகம் திருவிழாவின் போது அதிகாரிகளை பார்த்த மீட்கப்பட்ட தொழிலாளிகள் அவர்களிடம் தாங்கள் கொத்தடிமைகளாக தையூர் பகுதியில் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தங்களை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ஐ.டி.ரெய்டு...! திமுகவை அச்சுறுத்த முடியாது -உதயநிதி...!!