பராமரிப்பு பணி காரணமாகவே மின்தடை உள்ளது: செந்தில் பாலாஜி விளக்கம்

தமிழகத்தில் பராமரிப்பு பணி காரணமாகவே மின்தடை இருப்பதாகவும், மின் வெட்டு இல்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

பராமரிப்பு பணி காரணமாகவே மின்தடை உள்ளது: செந்தில் பாலாஜி விளக்கம்

சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாகத்தில் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின் உற்பத்தி மற்றும் கொள்முதலை அதிகரித்து மின்வெட்டை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த திமுக ஆட்சியில் மாநிலத்திலேயே 7 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்திக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், அதனை அதிமுக ஆட்சி உரிய முறையில் கடைபிடிக்காமல் தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.

 இதையடுத்து டாஸ்மாக் விவகாரம் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆட்சியில் கொரோனா தொற்று குறைந்த அளவில் இருந்தபோது மதுக்கடைகள் திறக்கப்பட்டதாகவும், அதற்கு அப்போது எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது மதுக்கடைகளை திறந்திருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

 இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கொரோனா தொற்று 9 சதவீதமாக இருந்து போதும் கடந்த ஆட்சியில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதாகவும், உயர்நீதிமன்ற தடையை மீறி உச்சநீதிமன்றம் சென்று கடந்த ஆட்சியில் மதுக்கடைகளை திறந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் திமுக ஆட்சியில், தொற்று குறைந்த மாவட்டங்களில் மட்டுமே மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், மதுக்கடைகள் திறந்த பின்பும் பாதிப்பு 5.4 சதவீதத்தில் இருந்து 2.8 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.