"அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் விற்பனை  ஊக்குவிக்கப்பட்டது" அமைச்சர் பொன்முடி!

"அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் விற்பனை  ஊக்குவிக்கப்பட்டது" அமைச்சர் பொன்முடி!

அதிமுக ஆட்சியில்தான் கள்ளச்சாராயம் விற்பனை  ஊக்குவிக்கப்பட்டதாக  அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்திய சம்பவத்தில் 16 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மீதமுள்ள 13 பேருக்கு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த அமரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மரக்காணம் காவல்நிலைய ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு காவல்துறை பெண் ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா,  உதவி ஆய்வாளர் சிவகுருநாதன், உதவி ஆய்வாளர் ஸ்டீபன் ஆகிய நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜிப்மரில் சிகிச்சை பெருபவர்களை அமைச்சர் பொன்முடி சந்தித்து ஆறுதல் கூறினார்.  அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி,  மது போதை விற்பனை செய்த அமரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 பேர் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், அதிமுக ஆட்சியில் தான் கள்ளச்சாராயம் விற்பனை செய்ய ஊக்குவிக்கப்பட்டார்கள் என குற்றம்சாட்டிய அவர் திமுகவின்  இரண்டு ஆண்டுகால ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள் எனக்கூறினார். தொடர்ந்து, காவல் துறையில் தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள் தான் இல்லை என்று கூறவில்லை. தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசாக தான் திமுக உள்ளததாகவும் அதிமுக ஆட்சியில் தவறு செய்பவர்கள் கைது செய்யப்படவில்லை திமுக ஆட்சியில் தவறு செய்பவர்கள் கைது செய்வதால் தான் வெளியில் தெரிவதாக தெரிவித்தார். செய்தியாளர்கள் தொடர் கேள்விகள் எழுப்பியதில் ஆவேசம் அடைந்த பொன்முடி அவர்களது மைக்கை தள்ளி விட்டு அவரிடம் வாக்கு வாதம் செய்தவாரே காரில் ஏறி சென்றார்.

இதையும் படிக்க:கர்நாடக முதலமைச்சா் யாா்? டெல்லி விரையும் தலைவர்கள்!