பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் விற்பனை அமோகம்!!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகளின் விற்பனை அமோகம்!!

விராலிமலை ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை யொட்டி, வியாபாரிகளும், இஸ்லாமியர்களும் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் செல்வதால் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் பிரசித்தி பெற்ற ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆட்டு சந்தை நடைபெறாத நிலையில் தற்போது, ஆட்டு சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வருகின்ற பத்தாம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் விராலிமலையில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை இஸ்லாமியர்களும் வியாபாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கின்றனர். வழக்கத்தை விட ஆடுகளின் விலை கடுமையாக உயர்ந்த போதிலும் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களில் மட்டும் 50 லட்சம் முதல் 70 லட்சம் ரூபாய் வரையில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

அடுத்த மாதம் ஆடி மாதம் என்பதால் அடுத்தடுத்து நடைபெறும் கோயில் திருவிழாக்களை முன்னிட்டு ஆடுகளின் தேவை மேலும் அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.