அக்.16ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் சசிகலா...

வருகிற 16ம் தேதியன்று, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளதால், பாதுகாப்பு வழங்க கோரி சசிகலா சார்பில் சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அக்.16ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார் சசிகலா...

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை நிறைவடைந்து சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அதிமுகவின் தலைமையை கைப்பற்ற தீவிர முயற்சி செய்து வருகிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த அவர், கட்சி விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருந்தார். 

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்தது. இதையடுத்து கட்சியை மீட்கப்போவதாகவும், மீண்டும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் வழிநடத்தப் போவதாகவும், அவர் அடிக்கடி தொண்டர்களுடன் உரையாடும் ஆடியோ பதிவுகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் விரைவில் வந்து எல்லோரையும் சந்திக்கிறேன் என்றும், யாரும் கவலைப்படாதீர்கள் எனவும் தெரிவித்திருந்தார்.  

இதனிடையே அதிமுகவின் பொன்விழா ஆண்டு வரும் 17ம் தேதி துவங்க உள்ள நிலையில், அதனை அக்கட்சி சார்பில் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 16ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்த உள்ளதாக சசிகலா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவும் சென்னை காவல்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி  மோசமான தோல்வியை சந்தித்துள்ள நிலையில், சசிகலா, முன்னாள் முதலமைச்சர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளதால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.