"செங்கோல் - தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை" பிரேமலதா விஜயகாந்த் புகழாரம்!

"செங்கோல் - தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை" பிரேமலதா விஜயகாந்த் புகழாரம்!

பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட்டது, தமிழகத்திற்கும் - தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது என ஆலங்குளத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை கண்டித்து ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகில் காமராஜர் சிலை முன்பாக தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக வின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கனிமவள கடத்தலை கண்டித்தும் கனிமவளம் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய பிரேமலதா விஜயகாந்த், திமுக அரசு தமிழகத்தில் பெண்களுக்கு இலவசங்களை அறிவிக்கிறோம் என அறிவித்து விட்டு ஒசி பயணம் என்று பெண்களை கேலி செய்வதாக குற்றம் சாட்டினார். மேலும் இலவச பேருந்துகள் அமைச்சரின் பணத்திலோ திமுக அறக்கட்டளையின் சார்பிலோ இயக்கப்பட வில்லை என்றும்  ஓசி என பெண்களை அமைச்சர்களே இழிவாக பேசுவதாகவும் தெரிவித்தார். தற்போது, 5 வயது குழந்தைகள் கூட இலவசங்களை புறக்கணிக்கும் நிலையில் இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து, இந்த ஆர்ப்பாட்டத்துடன் கனிமவளம் கடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும், தவறினால் ஒவ்வொரு  சோதனை சாவடிகளிலும் தேமுதிகவினர் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்படும் என எச்சரித்தார்.

கண்டன ஆர்பாட்டத்தை முடித்துக்கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜய்காந்த், புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, தமிழகத்தின் சோழர் ஆட்சி கால செங்கோல் இந்தியாவின் பாராளுமன்ற கட்டிடத்தில் நிறுவப்பட்டு இருப்பது தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதாகும் என தெரிவித்துள்ளார். இருப்பினும், குடியரசு தலைவரை அழைக்காதது தவறுதான் எனக் கூறிய அவர் இது குறித்து பாஜகவினர்களிடம் தான் கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!