அரவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து விற்பனை செய்யும் அரவை மில்லை வருவாய்த்துறையினர் அதிரடியாக கண்டுபிடித்து, 33 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.  

அரவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சிவகாசி கிரக தாயம்மாள் நகரில் வசிப்பர் அய்யனார். இவர் தமக்கு சொந்தமான கட்டிடத்தை மதுரை மாவட்டம் திருமங்கலைத்தைச் சேர்ந்த மாதவன் என்பவருக்கு அரவை மில் வைப்பதற்காக வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில், ஆள் அரவம் இல்லாத காட்டுப்பகுதியில் கட்டிடம் அமைந்துள்ளதை பயன்படுத்திய மாதவன் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி, பாலீஷ் செய்து புதிய மூடையாக மாற்றி அரிசி கடைகளுக்கு விற்று வந்துள்ளார்.

இதுகுறித்து ரகசிய தகவல் கிடைத்த சிவகாசி உதவி ஆட்சியர் பிரிதிவிராஜ், வட்டாட்சியர் ராஜ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு திடீரென சென்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளான மாதவன் மற்றும் அவரது நண்பர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பியோடி உள்ளனர்.

இதையடுத்து, ஆய்வு மேற்கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ எடை கொண்ட 653 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பேட்டி அளித்த வட்ட வழங்கல் அலுவலர், இதுபோன்ற அதிரடி ஆய்வு நடவடிக்கைகளில் தொடரும் என்றும், ரேஷன் அரிசியை பதுக்கி வைப்பவர்கள் மீது மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்பேரில் குண்டர் சட்டம் பாயும் என்றும் எச்சரித்துள்ளார்.