மஹாராஷ்டிராவைப் போலவே தமிழ்நாட்டிலும் ஆட்சிக்கவிழ்ப்பு? - ஜெயக்குமார்

செந்தில் பாலாஜி என்ன பிரம்மாண்டத்தை ஏற்படுத்தப்போகிறார் என்று தெரியவில்லை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

மஹாராஷ்டிராவைப் போலவே தமிழ்நாட்டிலும் ஆட்சிக்கவிழ்ப்பு? - ஜெயக்குமார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக குடியரசுத்தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரெளபதி முர்முவுக்கு ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த மாதம் 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார் திரௌபதி முர்மு. அப்போது ஓ.பி.எஸ். கலந்து கொண்ட நிலையில், ஈபிஎஸ் பங்கேற்கவில். எனவே இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்ற எதிர்பாப்பு எழுந்த நிலையில் ஈ.பி.எஸ். கலந்து கொண்டார். 

திரௌபதி முர்மு வரும் வரையில், நட்சத்திர விடுதியில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் தனித்தனி அறையில் காத்திருந்தனர். இபிஎஸ் உடன் ஏராளமானோர் சென்ற நிலையில், ஓபிஎஸ் உடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் சிலர் உடன் சென்றிருந்தனர். ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் தனித்தனியாக பிரிந்துள்ள நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவை தனித்தனியாக சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் மேடை ஏறிய எடப்பாடி பழனிசாமி, திரெளபதி முர்முக்கு பொன்னாடை போர்த்தி தமது ஆதரவு தெரிவித்ததுடன், அவரை வாழ்த்தியும் பேசிவிட்டு தமது ஆதரவாளர்களுடன் மேடையில் இருந்து இறங்கி சென்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் தேர்தல் வேட்பாளர் திரௌபதி முர்முவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி  ஆதரவு தெரிவித்தார், பழங்குடியினர் குடியரசு தலைவராக வருவது பெருமைக்குரியது.

அதிமுகவில் பொதுக்குழுவே இறுதி அதிகாரம் படைத்தது, பொதுக்குழுவில் கலந்துக்கொண்டு அந்த முடிவிற்கு  ஓ.பி.எஸ் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்றும் ஒற்றை தலைமையே அதிமுக தொண்டனின் விருப்பம் எனவும் கூறிய அவர் அதிமுகவினர் இதுபோன்று தனி தனியாக சந்திப்பதற்கு காரணமே ஓ.பி.எஸ் தான் என்று குற்றம் சாட்டினார்.

பேச்சு வார்த்தை பல முறை மேற்கொண்டபோதும் அவர் எதற்கு ஒற்றுகொள்ளவில்லை, உட்கட்சி விவகாரத்தை  நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லலாமா? என கேள்வி எழுப்பிய அவர் அப்போதெல்லாம் ஒற்றுகொள்ளாமல் தற்போது பேச்சு வார்த்தைக்கு தயார் என கூறுவது தொண்டர்களை ஏமாற்றும் செயல் என தெரிவித்தார்.

பொதுக்குழுவிற்கு ஓ.பி.எஸ். அழைப்பது குறித்து பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவெடுப்பார்கள் எனவும் செந்தில் பாலாஜி என்ன பிரம்மாண்டத்தை ஏற்படுத்தப் போகிறார் என தெரியவில்லை என கூறிய அவர் ஆட்சியை கவிழ்க்க செந்தில் பாலாஜி, சேகர்பாபு போதும் என விமர்சனம் செய்தார்.

நிகழ்ச்சிக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட திரெளபதி முர்முவுக்கு அதிமுக சார்பாக எங்களின் இதயம் கனிந்த முழு ஆதரவை தருகிறோம். அதிமுக சட்டவிதிப்படி தற்போது வரை நான்தான் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்" என்று கூறினார்.