துப்பாக்கிச் சூடு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதலாக நிதி அறிவிப்பு!

துப்பாக்கிச் சூடு: பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு  கூடுதலாக நிதி அறிவிப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தீர்மானம் கொண்டு வந்த ஸ்டாலின்:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இதனையொட்டி பேசிய வேல்முருகன், ராமச்சந்திரன், சின்னதுரை, சிந்தனைச் செல்வன் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடுமையாக வலியுறுத்தினர். 

தமிழக வரலாற்றின் மிகப்பெரும் கரும்புள்ளி:

இதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு, தமிழக வரலாற்றின் மிகப்பெரும் கரும்புள்ளி எனக் குறிப்பிட்டார். மேலும், 11 ஆண்கள் 2 பெண்கள் என 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த சம்பவம் தொடர்பாக அளித்த பேட்டியை நினைவு கூர்ந்தார். தொலைக்காட்சி பார்த்தே தெரிந்து கொண்டதாக ஈபிஎஸ் கூறியது, கடப்பாறையை விழுங்கி விட்டு கசாயம் குடித்தேன் எனக்கூறும் பழமொழியை விட மிகப்பெரிய பொய் எனவும் அவர் சாடினார்.

இதையும் படிக்க: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது ஏன்? சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் வந்த கருத்துக்கள் என்ன?

கூடுதல் நிதி:

சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்துக்களை அடிப்படையாக வைத்து 13 குடும்பங்களுக்கு ஏற்கனவே வழங்கிய நிதியோடு கூடுதலாக 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். தொடர்ந்து, அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வருவாய்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, காவல்துறை உள்ளிட்ட 10 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள், நிச்சயம் கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும் முதலமைச்சர் உறுதியளித்தார்.