மழைநீரும் கலக்கும் கழிவுநீர்.. டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம்..!

மழைநீரும் கலக்கும் கழிவுநீர்.. டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயம்..!

பருவ மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால் தமிழக்கத்தின் பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் கலப்பு, போக்குவரத்து பாதிப்பு போன்ற இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.

நோய்கள் பரவும் அச்சம்

கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதையடுத்து, மாநகராட்சி நிர்வாகம் மின் மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், வீடுகளை சூழ்ந்துள்ள மழை நீரோடு கழிவு நீரும் கலந்துள்ளதால் டெங்கு, மலேரியா காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, கொடைக்கானலில் இருந்து நாயுடுபுரம் செல்லும் சாலையில் மரம்  சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை மற்றும் வருவாய்த் துறை ஊழியர்கள் ஒன்றிணைந்து மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

இதையும் படிக்கவும் : படிப்படியாக குறையும் மழையின் தீவிரம் - வானிலை ஆய்வு மையம்

விருத்தாச்சலம்

விருத்தாச்சலம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட காவனூர் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மழை நீர் தேங்கியுள்ளது. மழைநீர் வெளியேற போதிய வடிகால் வசதியில்லாததால், குடியிருப்புப் பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பாம்பு, பூரான் போன்ற விஷ உயிரினங்கள் வீடுகளுக்குள் நுழைந்து விடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சம்மந்தனூர் கிராமம் அருகே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்துக் கொண்டு வெள்ள நீர் செல்கிறது. தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் பாலத்தை பயன்படுத்தும் அப்பகுதி மக்கள் பத்து கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றிப் பயணிக்கின்றனர். இதனிடையே, நெடுஞ்சாலைத் துறையினர் இருபுறமும் தடுப்புகள் அமைத்துள்ள நிலையிலும் சிறுவர்கள் ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்து வருகின்றனர்.