குழந்தைகள் வளர்ச்சிக்குழு பெண் திட்ட அலுவலருக்கு அரிவாள் வெட்டு :  இளநிலை உதவியாளர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது !!

தேனி மாவட்ட   குழந்தைகள் வளர்ச்சிக்குழு  பெண் திட்ட அலுவலரை,  அலுவலகத்தில் வைத்து அரிவாளால் வெட்டிய இளநிலை உதவியாளர். குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.

குழந்தைகள் வளர்ச்சிக்குழு பெண் திட்ட அலுவலருக்கு அரிவாள் வெட்டு :  இளநிலை உதவியாளர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது !!

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிக்குழு  மாவட்ட திட்ட அலுவலராக பணியாற்றுபவர் ராஜா ராஜேஸ்வரி. கடந்த மே 30ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில்  வழக்கம் போல பணியாற்றிக் கொண்டிருந்த அவரை,  உமாசங்கர் என்பவர் அரிவாளால் தலையில் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்தவர் அங்கிருந்த அரசு அலுவலர்களால் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
 
இது தொடர்பாக திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் பணியாற்றிய உமாசங்கர் என்பவரை அல்லிநகரம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் தேனி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள் அலுவலகத்தில் கடந்த 2015-16 ஆம் ஆண்டுகளில்  இளநிலை உதவியாளராக பணியாற்றிய உமாசங்கரை, அவருக்கு மேலதிகாரியாக பணியாற்றிய ராஜராஜேஸ்வரி, 17bயின் படி தண்டனை வழங்கியதால் பணியிட மாறுதல் ஆனார். அதனால் உமாசங்கர் பதவி உயர்வு பெற முடியாத நிலை ஏற்பட்டதால் உண்டான விரோதம் காரணமாகவே இந்த கொலை வெறித்தாக்குதல் நடந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து உமாசங்கர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.  இந்நிலையில் பெண் அரசு அலுவலரை அரசு அலுவலகத்தில் வைத்து கொலை வெறித்தாக்குதல் நடத்திய உமாசங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியர் முரளீதரன்  உத்தரவிட்டார்.