அருகருகே இருக்கை...மீண்டும் இணைவார்களா இபிஎஸ்- ஓபிஎஸ்!!!

அருகருகே இருக்கை...மீண்டும் இணைவார்களா இபிஎஸ்- ஓபிஎஸ்!!!

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரானது இந்த மாதம் 13ம் தேதி வரை நடைறவுள்ள நிலையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது.  

முதல் உரை:

இந்த ஆண்டின் சட்டப்பேரவை கூட்டத் தொடரானது சென்னை ஜார்ஜ் கோட்டையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கிய நிலையில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள், திட்டங்கள், வளர்ச்சி குறித்து ஆளுநர் ரவி உரையாற்றியுள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழகம் என்று சொல்லலாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திமுக கூட்டணி கட்சிகள் சட்டப்பேரவையில் அவருக்கு எதிராக முழக்கமிட்டு ஆளுநர் உரையை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுக்குழு கூட்டம்:

 எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தில் சென்றுகொண்டு இருப்பது தமிழ்நாடு முழுவதும் அறிந்த ஒன்றே.  கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்தே நீக்குவதாகவும் அந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு வெளியானது.  

மாற்றப்பட்ட தலைவர்: 

தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் செயல்பட்டு வந்த நிலையில், ஓ.பி.எஸ். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி.   அதிமுக பொதுக்குழு வழக்கு இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டது.  

வழக்கு நிலுவை:

இந்த நிலையில், பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி அது செல்லாது என உத்தரவிட்டார்.  இதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பு அளிக்கப்பட்டது.  தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.  

புறக்கணித்த எடப்பாடி தரப்பினர் இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் முறையே எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம். எல்.ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், இம்முறை மீண்டும் அருகருகே இருக்கை ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

சட்டப்பேரவையில் இன்று:

சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக சட்டப்பேரவை வளாகத்திற்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர்கள், திமுக எம். எல்.ஏக்கள் வருகை தந்திருந்தனர்.  அதேபோல், எதிர்க்கட்சி சார்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவரது ஆதரவு எம். எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் புடைசூழ சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்தார்.   

அதேபோல் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவு எம். எல்.ஏக்கள் சிலருடன் சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்தார். 

அருகருகே...:

அவர்களுக்கு  எதிர்கட்சிகளின் முன்வரிசையில் ஒதுக்கப்பட்டு இருந்த முதல் 2 இருக்கைகள் மாற்றம் செய்யப்படவில்லை.  எனவே எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் அருகருகே அமர்ந்து இருந்தனர். 

மீண்டும் இணைவார்களா?:

தமிழ்நாடு அரசியலில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக எதிரும் புதிருமாக இருந்த 2 தலைவர்கள் அடுத்தடுத்த இருக்கைகளில் அமர்ந்து இருந்தது பார்த்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அவர்கள் இருவரும் மீண்டும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடையேயும் தற்போது எழுந்துள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:    சட்டசபையில் திமுக மூத்த அமைச்சரின் ரசனையும் புறக்கணிப்பும்....!!!