அமைச்சர் குறித்த அவதூறு கருத்து...! பாஜக நிர்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை...?

அமைச்சர் குறித்த அவதூறு கருத்து...!  பாஜக நிர்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை...?

அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனை மற்றும் மதுபான கொள்முதல் தொடர்பாக தன்னைப் பற்றி ஆதாரமற்ற கருத்துக்களை பரப்புவதாக தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மீது குற்றம்சாட்டி, அதுபோல பேச தடை விதிக்கக்கோரி மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவதூறாக பேச நிர்மல்குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. அதன்பின்னர் நிர்மல் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், செந்தில் பாலாஜி முறைகேடு செய்ததற்கான போதிய ஆதாரம் உள்ளதாகவும், தனது முறைகேடுகளை மறைப்பதற்காகவே தனக்கு எதிரான இந்த வழக்கை அவர் தாக்கல் செய்துள்ளதாகவும்  தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, நிர்மல்குமார் தாக்கல் செய்த பதில்மனுவிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளிக்க உத்தரவிட்டார். செந்தில்பாலாஜி வழக்கு குறித்து டிவிட்டர் மற்றும் யூடியூப் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்க நிர்மல்குமாருக்கு விதிக்கபட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிட்டார்.

இதையும் படிக்க :  மதுபானக்கடையை அகற்ற கோரிய வழக்கு...! உத்தரவு பிறபித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை