சூரிய சக்தியில் இயங்கும் பஸ் ஸ்டாப்... தமிழகத்தில் முதல் முறையாக வடிவமைப்பு...

தமிழகத்தில் முதல் முறையாக, சூரிய சக்தியில் இயங்கும் பயணியர் பேருந்து நிழற்குடையை கிருஷ்ணகிரியில், எம்.பி. செல்லகுமார் திறந்து வைத்தார். 

சூரிய சக்தியில் இயங்கும் பஸ் ஸ்டாப்... தமிழகத்தில் முதல் முறையாக வடிவமைப்பு...

கிருஷ்ணகிரி சென்னை சேலம் சந்திப்பு சாலையில், ஆவின் மேம்பாலம் அருகே சூரிய சக்தியில் இயங்கும் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, 13லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த பயணியர் நிழற்குடை, தமிழகத்திலேயே, சூரிய சக்தியில் இயங்கும் முதல் பேருந்து நிலையமாகும்.

இதன் திறப்பு விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் கலந்து கொண்டு, பயணியர் நிழற்குடையை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இதில், சூரிய சக்தியில், இரவு முதல், அதிகாலை வரை எரியும் வகையில், மூன்று விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், கண்காணிப்பு கேமரா, வழித்தடிங்களில் செல்லக் கூடிய பேருந்து எண்கள், அவற்றின் நேரம் உள்ளிட்டவை எல்.இ.டி. திரையில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் எல்.இ.டி. டி.வி. அமைக்கப்பட்டு, விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

இதன் மூலம் வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கத்தின் போது, இடித்து அகற்றாமல், அப்படியே வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும். பயணிகள் இதனை முறையாக பயன்படுத்தி, பாதுகாத்து கொள்ள வேண்டும் என எம்.பி. கேட்டுக் கொண்டார்.