மழையில் நனைந்து முளைத்த நெல்மணிகள்... தஞ்சாவூரில் விவசாயிகள் வேதனை...

தஞ்சையில், நெல் கொள்முதல் செய்யப்படாததால், மழையில் நனைந்து, நெல் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  

மழையில் நனைந்து முளைத்த நெல்மணிகள்... தஞ்சாவூரில் விவசாயிகள் வேதனை...

மேட்டூர் அணை டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டு குறுவை சாகுபடி செய்யப்பட்டது தற்போது தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் பல பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வில்லை என்றும் திறக்கப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களும் முழுமையாக இயங்க வில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் அறுவடை செய்த நெல் மணிகள் நனைந்து முளைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரத்தநாடு அருகே உள்ள ஆழிவாய்க்கால் கிராமத்தில் கடந்த 15 நாட்களாக விவசாயிகள் அறுவடை செய்த நெல் மலை போல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது.

இதுவரை கொள்முதல் செய்யப்பட வில்லை நேற்றுதான் கொள்முதல் நிலையம் திறந்து ஒரு சில மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் 15 நாட்களாக தேங்கிக்கிடக்கும் நெல்மணிகள் மழையில் முளைவிட்டு உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

பகல் நேரத்தில் வெயில் அடிக்கும் பொழுது ஈரமான நெல் மணிகளை பரப்பி வைத்து காய வைத்து வருகின்றனர். தினமும் மழை பெய்து வருவதால் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 20 அல்லது 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும். ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலும் ஆயிரம் மூட்டை முதல் 2000 முட்டைகள் வரை கொள்முதல் செய்தால் தான் மழையில் நெல்மணிகள் நனைவதை தடுக்க முடியும் என விவசாயிகள் கூறியுள்ளனர்.