மேகதாது அணையால் தமிழ்நாடு பாதிக்கப்படுவதை ஏற்கமுடியாது.. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கடிதம்.! 

மேகதாது அணையால் தமிழ்நாடு பாதிக்கப்படுவதை ஏற்கமுடியாது.. கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கடிதம்.! 

மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று  அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்..

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என கூறி கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக கடிதம் எழுதியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேகதாதுவில் அணை கட்டுவது தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீர்வரத்தை பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு-கர்நாடகா இடையே நல்லுறவு தழைக்க ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். பெங்களூரு குடிநீர் தேவைக்காக அணை கட்டுவதாகக் கூறும் கருத்தை ஏற்க இயலாது என்று குறிப்பிட்டுள்ள அவர்,  பெங்களூருவில் ஏற்கனவே போதுமான குடிநீரைப் பெற கட்டமைப்புகள் உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

அதோடு காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டிற்கான உரிய நீர் ஆதாரம் குறித்து வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகவும், மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதிப்பதன் மூலம் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கு அனுமதிக்கப்பட்ட நதிநீர் பங்கீட்டு அளவை குறைத்துவிடும் என்றும் மேகதாது அணை திட்டத்தால் தமிழ்நாட்டின் பாசன பகுதிகள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்  அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.