தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு..!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 24 மணி நேரமும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதி செய்யும்படி தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு..!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்க மருத்துவர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், சிங்கல்பாடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி லோகேஸ்வரிக்கு, இறந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி லோகேஸ்வரி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், குடியாகுடியாத்தம் அரசு மருத்துவமனையில் தேவையான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் இல்லாததும், உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க மருத்துவர்கள் இல்லாததும் ஆதாரங்களில் இருந்து தெளிவாவதாக தெரிவித்தார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 4 வாரங்களில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.  

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 24 மணி நேரமும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், ஆம்புலன்ஸ்கள் இருப்பதை உறுதி செய்யும்படி,  துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கும்படியும், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.