கந்து வட்டி பிரச்சனை : நடவடிக்கைக் கோரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி  !!

கந்து வட்டிபிரச்சினையில் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர் மற்றும் மூதாட்டி தற்கொலைக்கு முயற்சித்தால் பரபரப்பு.

கந்து வட்டி பிரச்சனை : நடவடிக்கைக் கோரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி  !!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூரை சேர்ந்த நாரயணன் என்பவரது மகள் பிரவீணா. இவருக்கு திருமணமாகி கணவருடன் பிரிந்து வாழ்கிறார். சூர்யா என்ற தனது மகனுடன் பிரவீணா தந்தை வீட்டில் வசித்து வருகிறார். பழைய கார் வாங்கி, விற்பனை செய்யும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு 9 மாதம் பிரவீணா 14 பேரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும், 6 லட்ச ரூபாய் கடன்வாங்கி 3 கோடி ரூபாய் வட்டி செலுத்தியுள்ளதாகவும், அசலுக்கு மேல் 3 மடங்கு செலுத்திய பின்னரும் தன்னிடம் வட்டிக்கு கொடுத்தவர்கள் தன்னை துன்புறுத்தி வருவதாக கடம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதன் அடிப்படையில் 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிலரை கைதும் செய்தனர். மேலும் பிரவீணாவிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் பிரவீணா கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களில் ஒருவரான டி.கல்லுப்பட்டியை சேர்ந்த ராம்குமார் என்பவர் பிரவீணா, சரண்யா, சரண்யா கணவர் ஆண்டனி உள்ளிட்ட 8 பேர் தன்னிடம் ஆன்லைன் டிரேடிங் என்று சொல்லி பணத்தினை ஏமாற்றி விட்டமாக டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று பிரவீணா மற்றும் சரண்யாவை டி.கல்லுப்பட்டி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் பிரவீணா வழக்கு தொடர்பாக அவரது வழக்கறிஞர் அய்யலுச்சாமி டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்ற போது காவலர் நாரயணசாமி  மற்றும் ராம்குமார் இருவரும் சிலருடன் சேர்ந்தது தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரவீணா கொடுத்த கந்து வட்டியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சிவசக்தியின் கணவர் விருதுநகரில் காவலராக பணியாற்றும் நாரயணசாமி மற்றும் ராம்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பிரவீணா மீது பொய் வழக்கு போடப்படடுள்ளதாகவும்,  அதனை கண்டித்து வழக்கறிஞர் அய்யலுச்சாமி, பிரவீணாவின் தாயார் மகேஸ்வரி, சகோதரர் வினோபாலா, சரண்யாவின் கணவர் ஆண்டனி, அவரது மகன் சர்ச்சில் ஆகியோர் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய முன்பு திடீரென டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து அறிவுரைவழங்கி எச்சரித்து அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.