சென்னை புறநகர்ப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கோடை மழை : 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

சென்னை புறநகர்ப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கோடை மழை : 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

சென்னை புறகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்தது. தமிழ்நாட்டில் கோடை வெயில் கொதித்து வரும் நிலையில், ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், கொரட்டூர், பாடி, திருமுல்லைவாயில், ஆவடி, திருநின்றவூர், முத்தாபுதுப்பேட்டை, பட்டாபிராம் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட இடங்களில், சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக ஆவடி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. எனினும், குளிர்ந்த சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு நாமக்கல், திருச்சி, சேலம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.