நீங்களே முடிவெடுத்தா எப்படி? இது நல்லதுக்கு இல்ல... எடியூரப்பாவை எச்சரிக்கும் ஸ்டாலின்!!

காவிரியில் மேகதாது அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும். மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது

நீங்களே முடிவெடுத்தா எப்படி? இது நல்லதுக்கு இல்ல... எடியூரப்பாவை எச்சரிக்கும் ஸ்டாலின்!!

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டுவில் அணைகட்ட முயற்சி செய்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இதனால் அணை கட்டுவதற்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
 
இந்நிலையில், பெங்களூரில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய, பா.ஜ.க.,வைச் சேர்ந்த கர்நாடக மாநில முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா, ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதும் மேகதாது அணை கட்டப்படும் எனத் தெரிவித்தார். 

இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதும் மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா ஒருதலைபட்சமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அறிவித்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்த திட்டம் தமிழ்நாடு விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்றும் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு கிடைத்திடும் காவிரி நீர் அளவை குறைத்திடும் என்று கூறி தமிழ்நாடு அரசு மிக கடுமையாக இந்த திட்டத்தை எதிர்த்து வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி 28. 03.2015 அன்று தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த தீர்மானத்தை பிரதமரிடம் நேரடியாக வழங்கியும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இந்த புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு நாடு அரசு வழக்கு நிலுவையில் உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று நானும் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுத்தேன். இப்படிபட்ட சூழ்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா தன்னிச்சையாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பது இரு மாநில நல்லுறவிற்கு எந்த விதத்திலும் உகந்தது அல்ல.

இது தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு விவசாயிகளையும் வஞ்சிக்க முயற்சிக்கும் செயலாகும். எனவே காவிரியில் மேகதாது அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு கைவிட வேண்டும். மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்றும் தமிழ்நாடு சார்பில் எனது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.