தமிழ்ப் பரப்புரைக் கழகம்: இனி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடு தமிழர்களும் தமிழ் கற்கலாம்!

தமிழ்ப் பரப்புரைக் கழகம்: இனி வெளிமாநிலம் மற்றும் வெளிநாடு தமிழர்களும் தமிழ் கற்கலாம்!

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடு தமிழர்களுக்கு தமிழ் மொழி கற்பிக்கும் தமிழ்ப் பரப்புரைக் கழகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 

தமிழ் கல்வி:

உலகில் ஏறத்தாழ 90 நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் இளந்தலைமுறையினருக்கும் தமிழ்மொழியைக் கற்பிக்கவும், பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு செல்லவும் பல முயற்சிகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது. 

நிதி ஒதுக்கிய தமிழக அரசு:

அதன் ஒரு பகுதியாக, தமிழை எளிமையாகக் கற்பதற்கான தமிழ்ப் பாடநூல்கள், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் தமிழைக் கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல், தமிழைத் திறம்பட கற்பிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும் என அரசு ஆணை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசால் அப்பணிகளுக்கு முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்ப் பரப்புரைக் கழகத் தொடக்க விழா:

தமிழ் வளர்ச்சித்துறையின் அறிவிப்பான தமிழ்ப் பரப்புரைக் கழக திட்டமானது தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தமிழ்ப் பரப்புரைக் கழகத்திற்கான பணிகளை அறிமுகப்படுத்தும் விதமாக, தமிழ்ப் பரப்புரைக் கழகத் தொடக்க விழாவும், தமிழ் இணையக் கல்விக் கழகத்தினால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் வண்ணம் நிலை-1க்கான முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் கற்றல்-கற்பித்தலுக்கான இதர சேவைகள் வெளியீட்டு விழாவும், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கத்தில் இன்று மாலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க: “நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல்” நிச்சயம்...கே.டி.ராஜேந்திர பாலாஜி அதிரடி பேச்சு!

இவ்விழாவில், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், மனோ தங்கராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், தமிழ் அறிஞர்கள் மற்றும் பலர் இணையம் மூலமாகவும், நேரடியாகவும் கலந்து கொள்ளவுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.