அனைத்துக்கட்சி கூட்டம் குறித்து...பங்கேற்ற கட்சிகள் கூறியது என்ன?

அனைத்துக்கட்சி கூட்டம் குறித்து...பங்கேற்ற கட்சிகள் கூறியது என்ன?

10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இதனை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

பொன்முடி பேச்சு:

சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததாக கூறினார். அனைத்துக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காவிட்டாலும், இடஒதுக்கீட்டில் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஆதரிக்கும் என நம்புவதாக அவர் தெரிவித்தார். சமூகநீதியை சீர்குலைக்கும் எந்த ஒரு முடிவையும் அனுமதிக்க மாட்டோம் என்றும், இந்த இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மறுசீராய்வு மனு தாக்கல் தீர்மானம்:

தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு முறையை பின்பற்றுவோம் என்று கூறிய  அமைச்சர் பொன்முடி,  இடஒதுக்கீடு வழக்கில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க: கூட்டணி மாறுகிறாரா ஸ்டாலின்?

வைகோ பேச்சு:

பின்னர் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இடஒதுக்கீட்டில் தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக, மதிமுக சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றார்.

முத்தரசன் பேட்டி:

இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் முத்தரசன், சமூக நீதியை சீர்குலைக்கும் இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஒற்றுமையாக செயல்பட அனைத்துக் கட்சிகளும் முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். 

திருமாவளவன் கருத்து:

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில், தமிழ்நாடு அரசு மறுசீராய்வு தாக்கல் செய்யும் போது, அழுத்தமான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.