மீண்டும் தமிழக ஹாக்கி சங்க தலைவரான சேகர் மனோகரன்...!

மீண்டும் தமிழக ஹாக்கி சங்க தலைவரான சேகர் மனோகரன்...!

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள அகஸ்தியர்பட்டி பகுதியை சேர்ந்த மனோகரன் சாமுவேல் என்பவர் மகன் சேகர் மனோகரன். இவர் 2019 -ம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழக ஹாக்கி சங்கத்தின் தலைவராக இருக்கும் நிலையில் கடந்த 8 -ந் தேதி கோவையில் நடைபெற்ற ஹாக்கி சங்க தலைவர் தேர்தலில் போட்டியின்றி ஒருமனதாக மீண்டும் ஹாக்கி சங்க தலைவராக சேகர் மனோகரன் தேர்வாகியுள்ளார். இதனால் தனது பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக சொந்த ஊரான அம்பாசமுத்திரம் அருகேயுள்ள அகத்தியர்பட்டிக்கு சென்றுள்ளார், தொடர்ந்து அவரை அப்பகுதியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், தனது கிராமத்தை விளையாட்டு கிராமம் என்றே அழைக்கும் அளவிற்கு ஏராளமான வீரர்கள் உள்ளனர். மேலும் அவர்களை எனது தந்தை ஊக்குவிப்பதால் அவரை இப்பகுதியினர் விளையாட்டு தந்தை என அழைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் தற்போது  நமது தமிழக அணி போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்தது. தமிழகத்தில் இருந்து அதிகமான வீரர்களை இந்திய அணிக்கு விளையாட வைப்பதே எங்கள் குழுவின் முக்கிய நோக்கமாகும். மேலும் வருகிற ஜனவரி மாதம் புவனேஸ்வரில் நடைபெற இருக்கும் உலக அளவிலான ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக அரியலூரை சேர்ந்த கார்த்திக் (21) என்பவர் விளையாட உள்ளார். வறுமையில் உள்ள அவர் தற்போது உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட இருப்பது பெருமையாக உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், குழு விளையாட்டுகளில்  நமது தேசிய விளையாட்டான ஹாக்கி மட்டுமே ஒலிம்பிக்கில் உள்ளது. ஹாக்கியை பொறுத்தவரை இந்தியா, உலகளவில் 4 - வது இடத்தில் உள்ளது. எனவே மாணவ, மாணவிகள் விளையாட முன் வர வேண்டும். ஹாக்கி விளையாட்டு முக்கியமானதாக உள்ளது. அதற்கு அரசு உதவ வேண்டும் என பேசியுள்ளார்.