காஞ்சிபுரத்தில் புற்றுநோய்க்கு பிரத்யேக மருத்துவமனையை தொடங்க தமிழக அரசு திட்டம்...

காஞ்சிபுரத்தில் புற்றுநோய்க்கு பிரத்யேக மருத்துவமனையை தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் புற்றுநோய்க்கு பிரத்யேக மருத்துவமனையை தொடங்க தமிழக அரசு திட்டம்...

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் எலும்பு தானம் விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு பேருந்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னையின் அடையாளமாக உள்ள அடையார் புற்றுநோய் மருத்துவமனை எனது தொகுதியில் இருப்பது பெருமைக்குறியது. புற்றுநோய் சிகிச்சையில் தமிழகத்திற்கே அடையாளமாக இருக்கிறது இந்த மருத்துவமனை. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு வாகனம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 98 இடங்களில் இந்த வாகனம் சென்று புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், காஞ்சிபுரத்தில் புதிதாக பிரத்யேக புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை தொடங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், புற்றுநோய் வகைகள், எதனால் வருகிறது உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு வாகனம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் தமிழகம் முழுவதும் 98 இடங்களுக்கு செல்ல உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த வாகனத்தை பாதுகாக்கவும், அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க கடிதம் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
 
தமிழகத்தில் மாவட்ட வாரியாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபற்று வருகிறது.  தமிழகத்தில் 2017ல் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை தொடங்கி மூலைச்சாவு அடைந்த 142 பேரிடம் எலும்பு தானம் பெற்று , பயனாளிகளுக்கு சிகிச்சை அளித்து பொருத்தப்பட்டுள்ளது. 3,300 பேரிடம் இருந்து பல்வேறு வகையான உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு 2,750 பேர் பயனடைந்து உள்ளனர் என கூறினார்.

குட்கா பொருட்கள் விற்பனையை 100 சதவீதம் கட்டுப்படுத்த   நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விற்பனை செய்பவர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வதந்தி பரப்புவது எளிது, உண்மையை சொல்வது தான் கடினம். நடிகர் விவேக் மரணம் கொரோனா தடுப்பூசியால் இல்லை என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.

தற்போது 66 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என்றும் நாளை நடைபெறும் 50 ஆயிரம் முகாம்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டியவர்களுக்கு, தடுப்பூசி செலுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடே இந்த முகாம் நடத்தப்பட உள்ளது என கூறினார்.

கொரோனா தொற்றில் இருந்து விடுபடவில்லை என்றும் உலக நாடுகளில் மீண்டும் தொற்று அதிகரிப்பதால் அனைவரும் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும். நீட் விலக்கு சட்டமுன்வடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பார், குடியரசு தலைவரும் அதனை ஏற்பார். தமிழக ஆளுநர் புதிதாக வந்திருப்பதால் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவெடுப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.