தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொடரும்.. உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!

தமிழகத்தில் இரு மொழி கொள்கையை பின்பற்றுவது  என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே தொடரும்.. உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்!

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்தக் கோரி, தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டது.

அதில், ஒரே சீரான கல்வி முறையை கொண்டு வரும் வகையில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குக்காக மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்தியதாகவும், ஆனால்  தமிழக அரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, தேசிய கல்விக் கொள்கை  தாய்மொழியுடன் கூடுதலாக மொழிகளை கற்றுக் கொள்ளவே வலியுறுத்துவதாகவும் கூறப்பட்டது. 

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது , மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் உள்ளது?  கர்நாடகா, ஆந்திராவிலும் மும்மொழி கொள்கை பின்பற்றுவதால், கூடுதலாக ஒரு மொழி சேர்ப்பதில் என்ன சிக்கல்  என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்தி படிக்கும் வாய்ப்பு இல்லாததால், மக்கள் வேறு மாநிலங்களில் பணியாற்றுவதில் சிக்கல் ஏற்படக்கூடும் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், இந்தி படிப்பதை யாரும்  தடுக்கவில்லை என்றும், தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவது என கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெளிவுப்படுத்தினார்.