"ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" தமிழிசை உறுதி!

"ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" தமிழிசை உறுதி!

புதுச்சேரியில் ஸ்மார்ட்  சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்திருந்தால் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் மாளிகை தோட்டத்தில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் உறுதி மொழியை துணைநிலை ஆளுநர் வாசிக்க, ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை நாம் அனைவரும் இயன்ற செயல்களின் மூலமாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியைத் தொடங்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா எடுத்து வருவதாகவும் ஜி-20 மாநாட்டின்  முக்கிய நோக்கமே புவி வெப்பமயமாதலை தடுப்பதும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதும்தான் என தெரிவித்த அவர் புதுச்சேரியில் ஒரே நாளில் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு இருக்கிறது அதுபோல மரக்கன்றுகள் நடுவதற்கான ஒரு இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதாக தெரிவித்தார். 

தொடர்ந்து செய்தியாளர்கள் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் தரமற்றதாகவும், ஊழல் முறைகேடுகள் நடப்பதாக ஆளும் கட்சி ஆதரவு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி மாநிலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் தாமதமாக நடைபெற்று வந்ததால், பணிகளை விரைவுபடுத்த வேண்டுமென அதிகாரிகளை அழைத்து அறிவுறுத்தியுள்ளேன். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கான காலக்கெடு வரும் ஜீன் மாதத்துடன் முடிவு பெறுவதால், மத்திய அரசிடம் அனுமதி பெற்று மேலும் ஓராண்டு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருந்தால் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்தில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த யாரும் பாதிக்கப்படவில்லை என கூறினார். 

இதையும் படிக்க:"வெகு விரைவில் திமுக ஆட்சி கலைந்து விடும்" கே பி ராமலிங்கம் அதிரடி பேச்சு!