சமையலறையிலும் சோதனை செஞ்சாங்க...செல்போனை வாங்கி வச்சிக்கிட்டாங்க...பொள்ளாச்சி ஜெயராமன்.!!

மிரட்டல் பாணியிலேயே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை , என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

சமையலறையிலும் சோதனை செஞ்சாங்க...செல்போனை வாங்கி வச்சிக்கிட்டாங்க...பொள்ளாச்சி ஜெயராமன்.!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகனின் உறவினர் சிவக்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். 6 மணி நேரமாக நடந்த சோதனை முடிவடைந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் துணை சபாநாயகர்  பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில்,

"துணை சபாநாயகராக நான் இருந்த போது வசித்து வந்த வீட்டை காலி செய்து விட்டு நுங்கம்பாக்கம் வீட்டில் கடந்த 6 மாதமாக வசித்து வருகிறேன். இன்று காலை 6 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வந்தனர். சோதனை நடத்த வேண்டும் என கூறியபோது ஏன் எதற்காக என கேட்டேன். அதற்கு சரியான விளக்கத்தை தரவில்லை என்றும் 

சோதனைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தேன். என்னுடைய வீட்டிலே எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை. 3 அறைகளிலும் சோதனை நடத்தினர். சமையல் அறையிலும் சோதனை நடத்தினர். எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை என்று எழுதி கொடுத்து விட்டு சென்று விட்டார்கள்.  

மேலும் இந்த வீட்டின் உரிமையாளர் சிவக்குமாராக இருந்தாலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் நான் தான் குடியிருப்பதாக தெரிவித்தேன். என்னை பார்த்த பிறகாவது சென்று இருக்கலாம். உள்நோக்கத்தோடு சோதனை. அதிமுக தொண்டர்களிடமும், மக்களிடத்திலும் பீதியை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே என்னுடைய வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சோதனையின் போது என்ன நடந்தது என்பதனை தெரிவிக்க முடியாது. என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு பதிலை தெரிவித்து விட்டேன். நான் யாரிடமும் பேச லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அனுமதிக்க வில்லை. செல்போனை வாங்கி வைத்து விட்டனர். இந்த வீட்டில் என்னுடைய பொருட்கள் மட்டுமே இருக்கிறது. இந்த சோதனையை தவிர்த்து இருக்க வேண்டும். மிரட்டலுக்குகான பாணியே இது என்று முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.