அக்னிபத் திட்டம் இளைஞர்களின் கனவை நினைவாக்கும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக திட்டமிட்டு போராட்டம் தூண்டப்படுகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

அக்னிபத் திட்டம் இளைஞர்களின் கனவை நினைவாக்கும் - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். அப்போது பேசிய அவர், தேசத்திற்கான சேவையை செய்ய சிறந்த பாதையாக அக்னிபத் திட்டம் உள்ளது என்றும், இதன் மூலம் இராணுவத்திற்கு திறமை மிக்க வீரர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

மேலும் அக்னிபாத் திட்டம் பல நாடுகளில் உள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளதால், இளைஞர்களின் கனவை நினைவாக்கும் வகையில் திட்டம் உள்ளது என்றார். ஆனால் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக திட்டமிட்டு போராட்டம் தூண்டப்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை பிரதமர் தலைமையிலான மத்திய அரசு செய்துள்ளது என்றும் ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் எதையும் செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

மேலும் பாஜக ஆட்சியில் மீனவர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் மீனவர்கள் வைத்த கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருந்தது என்றார்.

ஒற்றை தலைமை அதிமுக உட்கட்சி விவகாரம் அதனால் பதில் அளிக்க முடியாது என்றும், எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரியில் பாஜக போட்டியிட தயாராகி வருகிறது என்றார்.