மத்திய அரசுக்கு முதலமைச்சர் தொடர் அழுத்தம் கொடுப்பார் - செந்தில் பாலாஜி உறுதி!

மத்திய அரசுக்கு முதலமைச்சர் தொடர் அழுத்தம் கொடுப்பார் - செந்தில் பாலாஜி உறுதி!

மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெறும் வரை, மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார் என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

மின்சார திருத்த மசோதா தாக்கல்:

எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மின்சார சட்டதிருத்த மசோதாவை மத்திய மின்துறை அமைச்சர் ஆர். கே. சிங் மக்களவையில் தாக்கல் செய்தார், மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மின்சார சட்டத் திருத்த மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என எதிர்கட்சி எம்.பிக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  அதுமட்டுமின்றி இந்த மசோதாவுக்கு  தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசு எதிர்ப்பு:

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மின்சார சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இந்த மசோதாவால் தமிழ்நாட்டில் அமலில் உள்ள விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் பாதிக்கப்படும் எனவும், சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால் இலவச மின்சாரத்தை நம்பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர் எனவும் தமிழ்நாடு மக்களவை எம்.பி. டி.ஆர். பாலு எதிர்ப்பு தெரிவித்தார். இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மசோதாவை எதிர்த்து பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சி:

கரூர் மாநகராட்சி அரசு மேல்நிலை பள்ளியில், மாவட்ட அளவிலான போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டார். பின்னர், செந்தியாளர்களை சந்தித்து பேசினார்.

மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார்:

செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, மத்திய அரசின் மின்சார திருத்தச் சட்டத்தால் தமிழகத்தின் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் பாதிக்கப்படும் என்றார். தமிழக மின்துறை கட்டமைப்பு மற்றும் வசதிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் அபாயம் ஏற்படும் என்பதால், இந்த மின்சார திருத்த சட்டத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருவதாகக் கூறினார். மேலும் இச்சட்டத்தை திரும்ப பெறும்வரை மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார் என உறுதிபட தெரிவித்தார்.