உள்ளாட்சி தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றி பெற தி.மு.க.வினர் பாடுபட வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிவுரை

உள்ளாட்சி தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றி பெற தி.மு.க.வினர் பாடுபட வேண்டும் என, மாவட்ட செயலாளர்களுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றி பெற தி.மு.க.வினர் பாடுபட வேண்டும் : மு.க.ஸ்டாலின் அறிவுரை
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு, விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு மற்றும் 9 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியினர் எவ்வாறு பணியாற்ற வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தை மக்களிடம் எந்த வகையில் கொண்டு செல்வது, குறிப்பாக தி.மு.க. அரசின் சாதனைகளை வீடு வீடாக சென்று எடுத்து கூறுவது, தேர்தல் வெற்றிக்கான வியூகங்கள் அமைப்பது, கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்குவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உள்ளாட்சி தேர்தலுக்கு மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்க திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, மக்கள் மத்தியில் நமக்கு நல்ல பெயர் இருப்பதாகவும், அதனை பயன்படுத்தி நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றி பெற தி.மு.க.வினர் பாடுபட வேண்டும் எனவும், 9 மாவட்ட செயலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
 
இதனிடையே, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், வரும் 13-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தலைமை கொறடா செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் அந்த கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அன்றைய தினம் தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.