அறநிலைய துறைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்....!!

அறநிலைய துறைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்....!!

வடபழனி முருகன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மற்றும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடபழனி முருகன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மற்றும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கோவில் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஒப்புதல் இல்லாமல் பத்திரப்பதிவு செய்ய தடை உள்ளதாகவும், அதன்படி பதிவு மறுக்கப்பட்ட கோவில் சொத்துக்களின் பட்டியலை தாக்கல் செய்யவும், மூன்று கோவில்களுக்கும் சொந்தமான நிலங்களை அளந்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடக் கோரியுள்ளார்.  கோவில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், மோசடியாக பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ரத்து செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் கோரியிருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கலைமதி அமர்வு, வடபழனி முருகன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் மற்றும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை நேரில் சென்று பார்வையிட்டு, அளந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

வழக்கு விசாரணையை, கோவில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றிய நீதிபதிகள், விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிக்க:   சாந்தோம் நெடுஞ்சாலையில் சுரங்க நடைபாதை ...?!!