செஸ் ஒலிம்பியாட்  : உலக நாடுகளை உற்று நோக்க வைத்த தாலிபன் கொடி !!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தாலிபான் கொடி இடம் பெற்றது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இது இரு நாட்டுக்கும் இடையிலான நல்லுறவைக் காட்டுகிறது என்று ஆப்கானிஸ்தானின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி இயக்குநர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட்  : உலக நாடுகளை உற்று நோக்க வைத்த தாலிபன் கொடி !!

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

இந்த போட்டியில் பங்கேற்றுள்ள ஆஃப்கானிஸ்தான்  செஸ் வீரர்கள் விளையாடும் போது தலிபான்களின் கொடி வைக்கப்பட்டிருந்தது. போட்டி நடக்கும் அரங்குக்கு வெளியேயும் ஆஃப்கானிஸ்தான் நாட்டின் சார்பாக தலிபான்கள் கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. இந்த தலிபான்கள் கொடி முன்பாக ஆஃப்கானிஸ்தான் செஸ் கூட்டமைப்பின் தலைவர் குரோசி ஓபைதுல்லா புகைப்படம் எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்களை ஆஃப்கானிஸ்தான் நாட்டு அரசுத் துறைகளும் மறுபதிவு செய்தன. 

ஆனால் ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் விளையாடும் இரண்டு அரங்குகளிலும், போட்டி மேடையிலும் செஸ் கூட்டமைப்பின் இணையதளத்திலும் அந்த நாட்டின் பழைய மூவர்ண கொடியே இடம் பெற்றுள்ளன.  

இந்நிலையில் , செஸ் ஒலிம்பியாட்டில் தாலிபான்கள் கொடி இடம் பெற்றது குறித்து பல்வேறு நாடுகள் கண்டனக் குரல் எழுப்பியதையடுத்து சர்வதேச செஸ் கூட்டமைப்பினர் கொடிக்கம்பத்தில் இருந்த தாலிபான் கொடியை நீக்கியதோடு அச்சிடப்பட்ட தாலிபான் கொடி மீது வெள்ளை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்துள்ளனர்.

தொடர்ந்து இது குறித்து விளக்கமளித்துள்ள இந்திய செஸ்  கூட்டமைப்பு அதிகாரிகள் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரிலேயே  தலிபான்களின் கொடி வைக்கப்பட்டதாகவும் பின்னர் மத்திய அரசு கூறியதன் பேரில் ஆஃப்கானிஸ்தான் கொடிகளை நீக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்கள்.  
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தலிபான்க கொடிகளை இடம் பெறச் செய்தது வெளியுறவுக் கொள்கை அடிப்படையிலானது என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதை உறுதிப்படுத்தும் வகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தாலிபான் கொடி இடம் பெற்றது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் இது இரு நாட்டுக்கும் இடையிலான நல்லுறவைக் காட்டுகிறது என்று ஆப்கானிஸ்தானின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி இயக்குநர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய அரசு தற்போது வரை தாலிபான்களின் அரசை நேரடியாக ஆதரிக்கவில்லை என்றாலும் ஆப்கான் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகிறது.  இந்நிலையில் , மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தாலிபான்களின் கொடி இடம்பெற்றது உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது.