ஊருக்குள் புகுந்த தண்ணீர்- வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு

காஞ்சிபுரம் அருகே ஏரிக்குச் செல்லும் கால்வாய் நீர், ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

ஊருக்குள் புகுந்த தண்ணீர்- வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம்,  வாலாஜாபாத் ஒன்றியம் அடுத்த புதுப்பேட்டை, ஆண்டாள் நகர், பிரசன்னா நகர், உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது.

கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக குடியிருப்புகளுக்கு அருகிலுள்ள பூசிவாக்கம்  ஏரி நிரம்பி உள்ளது.  ஏரி நிரம்பிய நிலையில் உபரி நீர் அருகிலுள்ள ஓட்டிவாக்கம் கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்று வருகிறது.

இந்நிலையில் உபரி நீர் செல்லும் கால்வாயில் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ள காரணத்தால் கால்வாயில் செல்லவேண்டிய ஏரி நீரானது, ஆண்டாள் நகர், பிரசன்னா நகர், புதுப்பேட்டை உள்ளிட்ட கிராம குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விட்டது.

ஏரியிலிருந்து வெளியேறும் வெள்ள நீர் தொடர்ந்து அதிகரித்து  குடியிருப்பு பகுதிகளுக்குள் முட்டிக்கால் அளவிற்கு மேல் புகுந்து உள்ளதால், அப்பகுதி மக்கள் எங்கும் செல்லமுடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பணிக்குச் செல்பவர்கள் தண்ணீரில் நனைந்தபடியே சென்று வருகின்றனர். குடியிருப்புவாசிகள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே தஞ்சமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிவித்தும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் ஏரியிலிருந்து வெளியேறும்  நீர் மெல்ல மெல்ல உயர்ந்து வருவதால் பெரும் சிரமம் அடைந்து வருவதாகவும் உடனடியாக நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.