கடலூரில் தங்கியிருந்த வெளிநாட்டவரால் பரபரப்பு... சந்தேகத்திற்கிடமான சர்வதேச அழைப்புகள்... சுற்றிவளைத்த உளவுத்துறையினர்...

கடலூரில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த சிலரிடம் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரில் தங்கியிருந்த வெளிநாட்டவரால் பரபரப்பு... சந்தேகத்திற்கிடமான சர்வதேச அழைப்புகள்... சுற்றிவளைத்த உளவுத்துறையினர்...
கடலூர் மாவட்டம் பெரியகங்கனாங்குப்பம் செல்வவிநாயகர் நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு, சர்வதேச அழைப்புகள் தொடர்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சர்வதேச அழைப்புகளை மத்திய உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வந்தது. வங்கதேசத்தில் இருந்து அடிக்கடி இந்த தொலைபேசி எண்கள் வந்ததாகவும், அதே நேரத்தில் சந்தேகப்படும்படி இந்த தொலைபேசி உரையாடல்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக அந்த வீட்டிற்கு சென்ற மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள், வங்கதேசத்தை சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட 6 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இவர்கள் கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக கடலூரில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் சுற்று வட்டாரப்பகுதியில் யாருடனும் இவர்கள் தொடர்பில் இல்லை. இதனால் இவர்களை பற்றி யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை.

 
இதனிடையே, வங்கதேசத்தினர் தங்கியிருந்த வீட்டை சுற்றி காவல்துறை குவிக்கப்பட்டு, அந்த வீட்டில் இருந்தவர்கள் யார்? அவர்கள் பாஸ்போர்ட் மூலமாக இங்கு வந்து தங்கியுள்ளனரா? அனுமதி பெற்று தான் இங்கு வந்துள்ளனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்த பகுதிக்கு மத்திய உளவுப்பிரிவு வந்ததும், கடலூர் காவல்துறையும் இந்த வீட்டை சுற்றி வளைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.