மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன்...8 வருடம் கழித்து கிடைத்த தீர்ப்பு...!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன்...8 வருடம் கழித்து கிடைத்த தீர்ப்பு...!

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு 11 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை கடந்த 2014 செப்டம்பர் முதல் 6% வட்டியுடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இறப்பிற்கு இழப்பீடு கேட்டு வழக்கு:

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த செல்வம் என்பவர்,மின் விபத்தில் உயிரிழந்த தனது மகன் முத்துகிருஷ்ணனின் இறப்பிற்கு இழப்பீடு வழங்க கோரி மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த தனது மகன், அருகில் விழுந்த பந்தை எடுப்பதற்காக சென்றபோது இரும்பு வேலியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மின் கம்பங்கள் முறையாக பராமரிக்கப்படாததே தனது மகனின் இறப்புக்கு காரணம் என மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

வாதங்கள் முன்வைப்பு:

இந்நிலையில் இன்று இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி விஜயகுமார், மின் கம்பங்கள் முறையாக பராமரிக்கப்படாததே தனது மகனின் இறப்புக்கு காரணம் என மனுதாரர் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மின்வாரியம், அந்த இரும்பு வேலியானது ஏ.கலப்பூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டது என்றும், இதில் மின்வாரியத்தின் அலட்சியம் எதும் இல்லை எனவும்  தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கிராம பஞ்சாயத்து தரப்பில் இது கடவுளின் செயல். நாங்கள் பொறுப்பேற்க இயலாது என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க: ஸ்ரீரங்கம் கோவில் கணக்கு வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்ற போட்ட அதிரடி உத்தரவு...!

உத்தரவிட்ட நீதிபதி:

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மாணவன் உயிரிழந்த சம்பவத்தை பொறுத்தவரை ஏ.கலப்பூர் கிராம பஞ்சாயத்து நிர்வாகம் வேலியை முறையாக பராமரிக்க தவறியதே மின் விபத்து ஏற்பட காரணம். ஆகவே, மனுதாரரின் வயதை கருத்தில் கொண்டு 11 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை 2014 செப்டம்பர் முதல் 6% வட்டியுடன் கணக்கிட்டு, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவின் ஏ.கலப்பூர் கிராம பஞ்சாயத்து தலைவர், மனுதாரருக்கு 12 வாரங்களில் வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.