மாநிலங்களுக்கு GST இழப்பீட்டுத் தொகை வழங்குவது நீட்டிக்கப்படுமா? விளக்கம் கோரி ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பி.டி.ஆர் கடிதம் !

மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையால் எதிர்பார்த்த  அளவு வரி வருவாய் கிடைக்கவில்லை என நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 

மாநிலங்களுக்கு GST இழப்பீட்டுத் தொகை வழங்குவது நீட்டிக்கப்படுமா? விளக்கம் கோரி ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பி.டி.ஆர் கடிதம் !

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், மாநிலங்களுக்கு வழங்கப்படும் GST இழப்பீட்டுத்தொகை முடிவடைவது தொடர்பாக பாமக எம்.எல்.ஏ., ஜி.கே.மணி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசியல், கட்சிக்கு அப்பாற்பட்டு பொருளாதாரம் மற்றும் ஜனநாயகம் சார்ந்து தாம் பேசுவதாக குறிப்பிட்டார். மேலும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த விற்பனை வரி, வருவாய் மற்றும் மதிப்பீட்டு வரி வருவாய் ஆகியன GST வரிக்குள் கொண்டு வரப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், ஆனால்  எதிர்பார்த்த அளவு வரி வருவாய் கிடைக்கவில்லை என்றும் கூறினார். 

அதுமட்டுமின்றி இந்த ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மேலும் சில ஆண்டுகளுக்கு வழங்கிட  அனைத்து மாநிலங்களும் வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். 

வருகிற ஜூன் 30ம் தேதியுடன் மாநிலங்களுக்கு GST இழப்பீட்டுத் தொகை வழங்குவது முடிவுக்கு வரும் நிலையில், அதை மத்திய அரசு நீட்டிக்குமா? இல்லையா? என்பது குறித்து வதந்திகள் பல பரவிவரும் நிலையில், தெளிவான விளக்கம் கோரி மத்திய நிதியமைச்சகத்துக்கும், GST கவுன்சிலுக்கும் நாளை மீண்டும் ஒருமுறை கடிதம் எழுத உள்ளதாக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.