ஈபிஎஸ்ஸை சந்திக்கும் ஆளுநர்...சட்டத்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கொடுக்காதது ஏன்?

ஈபிஎஸ்ஸை சந்திக்கும் ஆளுநர்...சட்டத்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கொடுக்காதது ஏன்?

ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக ஆளுநர் கேட்ட கேள்விக்கு 24 மணி நேரத்திற்குள் பதில் அளித்துள்ளதாகவும், விரைவில் ஆளுநர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பார் என எதிர்பாப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

விளக்கம் கேட்ட ஆளுநர்; பதிலளித்த அரசு:

ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான சட்ட மசோதா, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் தரப்பில் வியாழக்கிழமை விளக்கம் கேட்கப்பட்டது. அதில், ஆன்லைன் ரம்மி சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ள தண்டனைகள் விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என்றும், அதற்கு அளவீடு என்னவென்றும் ஆளுநர் கேள்வி எழுப்பி கடிதம் எழுதினார். அவர் கேட்டுள்ள விளக்கங்களுக்கு 24 மணிநேரத்திற்குள் அரசு பதிலளித்துள்ளது.

ரகுபதி பேட்டி:

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்  எஸ்.ரகுபதி, ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக கடந்த ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துவிட்டது. ஆனால் அதற்கு பதிலாக புதிய சட்டத்தை இயற்றுங்கள் என்று ஐகோர்ட்டு அனுமதி அளித்திருந்தது. என்னென்ன காரணங்களுக்காக அந்த சட்டத்தை ஐகோர்ட்டு ரத்து செய்ததோ, அதற்கு பதிலாக புதிய ஷரத்துகளை உள்ளடக்கிய புதிய சட்டத்தை இயற்ற முற்பட்டிருக்கிறோம். புதிய சட்டத்துக்கான இந்த சட்ட மசோதாவில் 3 கேள்விகளை ஆளுநர் எழுப்பி இருக்கிறார். அதற்கு நாங்கள் தெளிவாக, விளக்கமாக பதிலளித்திருக்கிறோம். இந்த விளக்கத்தை கவர்னர் ஏற்றுக் கொண்டு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தருவார் என்று எதிர்பார்க்கிறோம்.

இதையும் படிக்க: "உயிருள்ளவரை காங்கிரஸ் கட்சியில் இருப்பேன் " ரூபி அதிரடி!

சட்ட மசோதாவில் மட்டும் ஏன் சந்தேகம் கேட்க வேண்டும்?:

தொடர்ந்து பேசிய அவர், அவசரச் சட்டத்தில் உள்ள அதே அம்சம்தான் சட்ட மசோதாவில் உள்ளது. ஆனால் அதற்கு அனுமதி அளித்தவர், சட்ட மசோதாவில் மட்டும் ஏன் சந்தேகம் கேட்க வேண்டும்? என்று நீங்கள் கேட்டால், அது அவருக்குத்தான் தெரியும். சட்ட மசோதா கொண்டு வரப்பட்டதால் அவசர சட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது கடந்த 2 நாட்களாக அதற்கான விளம்பரங்கள் வந்துகொண்டிருப்பதாக தெரிவித்தார்.

சட்டத்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கொடுக்கவில்லையே ஏன்?:

சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்துவதற்காக ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பி இருக்கிறோம். இதுவரை நேரம் தரப்படவில்லை. எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க நேரம் கொடுக்கிறார், ஆனால் சட்டத்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கொடுக்கவில்லையே ஏன்? என்று கேட்டால், அது கவர்னருக்கே தெரிந்த வெளிச்சம் என்று கூறினார்.