ஸ்டாலின் முதல்வரானதால் தீக்குளித்த நபர்.. வேண்டுதல் நிறைவேறியதால் உயிரை விடுகிறேன் என கடிதம்.!  

ஸ்டாலின் முதல்வரானதால் தீக்குளித்த நபர்.. வேண்டுதல் நிறைவேறியதால் உயிரை விடுகிறேன் என கடிதம்.!  

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரானதால் வேண்டுதலை நிறைவேற்ற தீக்குளித்துக்கொண்ட நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் அருகே இருக்கும் லாலாபேட்டை என்ற பகுதியை சேர்ந்தவர் உலகநாதன். இவர் அரசு போக்குவரத்துக்கு கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.  தீவிர திமுக தொண்டரான இவர் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று கடுமையாக தேர்தல் பணியை செய்துள்ளார். அதைத் தொடர்ந்து திமுக வெற்றிபெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். 

இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டன. அதன் பின்னர் தான் அடிக்கடி செல்லும் மணிமங்கலம் புதுக்காளியம்மன் கோவிலுக்கு சென்றவர், அங்கு  மண்ணெண்ணெய், பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீவைத்துக்கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அதன்பின் அவர் தீக்குளித்த இடத்திற்கு அருகில் கிடந்த கடிதத்தை மீட்ட போது தான் இவர் தீக்குளித்ததற்கான காரணம் தெரியவந்தது. அந்த கடிதத்தில் திமுக தலைவர் மு.க,.ஸ்டாலின் தமிழக முதல்வராக வேண்டும் என்றும், செந்தில் பாலாஜி அமைச்சராக வேண்டும் என்றும் புதுக்காளியம்மனிடம் வேண்டியுள்ள தகவலும், அப்படி நடந்தால் தன் உயிரை விட தயாராகயிருப்பதாகவும் கூறிய தகவலும் தெரியவந்துள்ளது. 

மேலும், தான் வேண்டியபடியே ஸ்டாலின் தமிழக முதல்வராகவும், செந்தில் பாலாஜி அமைச்சராகவும் பதவியேற்றத்தால் தன் வேண்டுதல் நிறைவேறியதால் சுயநினைவுடன் இறப்பை தேடுகிறேன் என்றும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.  இந்த சம்பவம் கரூர் மாவட்டத்தை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.