வெள்ளத்தில் காருடன்  அடித்துச் செல்லப்பட்ட நபர்... 3வது நாளாக தேடும் பணி தீவிரம்...

திருக்கோவிலூர் அருகே காருடன்  தரைப்பாலத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரை 3வது நாளாக தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர்.

வெள்ளத்தில் காருடன்  அடித்துச் செல்லப்பட்ட நபர்... 3வது நாளாக தேடும் பணி தீவிரம்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள பழங்கூர் கிராமத்தையும் ஆலூர் கிராமத்தையும் இணைக்கும் கெடிலம் ஆற்றுத் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தில் நவம்பர் 29ஆம் தேதி இரவு 8 மணி அளவில் கிளியூர் கிராமத்தை சேர்ந்த கிளியின், சங்கர், முருகன் ஆகிய 3 பேரும் இண்டிகா கார் மூலமாக பாலத்தை கடக்க முயற்சி செய்துள்ளனர்.

அப்போது வெள்ளப்பெருக்கின் காரணமாக பாலத்திலிருந்து மூவரும் காருடன் அடித்துச் சென்றனர். இதில், கிளியன் சங்கர் ஆகிய இருவரும் நீரில் தத்தளித்த தப்பிவிட்ட,   காருடன் அடித்து செல்லப்பட்ட முருகனை இரண்டு நாட்களாக திருக்கோவிலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு மீட்புக் குழுவினர் ஆற்றின் இரண்டு கரைகளிலும் தீவிரமாக தேடிவந்தனர்.

இதில், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, ரிஷிவந்தியம் சட்டமன்ற    உறுப்பினரான வசந்தம் கார்த்திகேயன் நேற்றைய தினம் மீட்பு பணியை நேரில் பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஆட்சியரிடம் பேசிய அவர் அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை உடனடியாக வரவழைத்து முருகனை தேடும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

அதற்கிணங்க இன்று அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 20 வீரர்கள் மூன்றாவது நாளாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முருகனையே தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவ இடத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஏராளமான அரசு ஊழியர்கள் உள்ளனர்.